Monday, February 27, 2012

மந்திரவாதி கிட்டு


முல்லைக்காட்டுக்கு புதிதாக குரங்கு ஒன்று வந்தது. அந்த குரங்கின் பெயர் கிட்டு! அது நிறைய மந்திர வித்தைகளை செய்து காட்டியது.

வெறும் கையை காட்டி, அந்த கையை அப்படியும் இப்படியும் ஆட்டி ஆட்டி சர்க்கரையை வரவைத்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியது. அந்த சர்க்கரையை அனைவருக்கும் கொடுத்தது.

ஒரு பூவை எடுத்து அப்படியே கைகளில் வைத்து கசக்கி தூக்கி வானத்தில் வீசியது. பூ குருவியாக மாறி வானத்தில் பறந்தது. அதைப்பார்த்து முல்லைக்காட்டு முயல்களும்,எலிகளும்,யானைகளும்,மான்களும் ஆச்சர்யப்பட்டன. அனைவரும் கைத்தட்டி மகிழ்ந்தனர்.

வித்தைகள் காட்டிக்கொண்டிருந்த குரங்கு திடீரென கூட்டத்தை நோக்கி ‘’உங்கள் தலைவன் யார்?’’ என்று கேட்டது.

‘’எங்களுக்கெல்லாம் தலைவர் சிங்கராஜாதான்! ஏன் கேக்கறீங்க? ’’ என்றது எலிக்குட்டி.
பதிலே சொல்லாமல் சிரித்துக்கொண்டே சிங்கத்தின் குகைக்கு கிளம்பியது குரங்கு கிட்டு.
சிங்கராஜாவின் குகை வாசலில் நின்றுகொண்டு ‘’ஏய் கோழை சிங்கமே.. வெளியேவா.. தைரியமிருந்தா என்னோடு மோதிப்பார்’’ என்று கூப்பிட்டது.

குகைக்குள்ளேயிருந்து நரியாரும் சிங்கராஜாவும் வெளியே வந்தனர்.
‘’வணக்கம் குரங்காரே நீங்க யார் உங்களை இந்த காட்டில் பார்த்ததில்லையே! ஏன் கோபமாக கூச்சல் போட்டுகிட்டு இருக்கீங்க’’ என்றது.

‘’நான் இமயமலையிலிருந்து வருகிறேன், கடவுள் எனக்கு நிறைய மந்திர சக்தி கொடுத்திருக்கிறார். மரியாதையாக இந்த காட்டை என்னிடம் கொடுத்துவிட்டு ஓடிவிடு.. இல்லையென்றால் உன்னை ஒரே நிமிடத்தில் அழித்துவிடுவேன், தைரியமிருந்தால் என்னோடு சண்டை போட்டு ஜெயித்துகாட்டு!’’ என்று சிங்கராஜாவை சண்டைக்கு அழைத்தது.




தன்னுடைய வெறும் கையை அப்படி இப்படி ஆட்டி அதிலிருந்து சர்க்கரையை வரவழைத்து ‘’அஸ்கு லஸ்கா.. குஸ்கு புஸ்கா’’ என்று சொல்லி சிங்கத்தின் மீது வீசியது! சிங்கத்துக்கு ரொம்பே கோபம் வந்துவிட்டது.. ‘’மவனே உன்னை அடிச்சி நொறுக்கிடறேன்’’ என குரங்கை அடிக்கப் பாய்ந்தார். உடனே நரியார் சிங்கத்திடம் சென்றார்.

‘’சிங்கராஜா இவன் ஒரு டம்மிபீஸு.. இவனை நான் பார்த்துக்கொள்கிறேன். நீங்க ரெஸ்ட் எடுங்க’’ என்றார் நரியார் நந்து.

குரங்கிடம் போய் நரியார் பேசினார். ‘’குரங்காரே.. ரொம்ப பேசாதீங்க..நான் கூட மிகப்பெரிய மந்திரவாதிதான். என்னோடு உங்களால் போட்டிபோட முடியுமா? நான் செய்யும் மாயாஜாலத்தை உங்களால் செய்ய முடியுமா?’’ என்றார்.

‘’அப்படி என்ன என்னாலேயே செய்யமுடியாத மந்திர வித்தை?’’ என்று திமிராக கேட்டது கிட்டு.

‘’நாளைக்கு காலைல சூரியன் உதிக்கும்போது ஆற்றங்கரைக்கு வந்துடுங்க குரங்காரே.. நம்ம போட்டிய அங்க வச்சிக்கலாம்’’ என்றார் நரியார்.

உடனே குரங்கு ஆவேசமாக ‘’ஏய் நரியே! நாளைக்கு போட்டில நீ தோத்துட்டா சிங்கராஜா இந்த காட்டைவிட்டே போயிடணும். அதுக்கு பிறகு இந்த முல்லைக்காட்டுக்கு நான்தான் ராஜா! நான் வச்சதுதான் சட்டம். எல்லாரும் என் பேச்சைதான் கேக்கணும்.’’ என்றது குரங்கு.

‘’ஒருவேளை நீங்க தோத்துட்டா என்ன பண்றது குரங்காரே’’ என்றார் நரியார்.
உடனே குரங்கு ‘’சிங்கராஜா காலில் விழுந்து மன்னிப்புக்கேட்டுவிட்டு போய்விடுகிறேன்’’ என்றது

****




இரவெல்லாம் குரங்கு கிட்டுவுக்கு தூக்கமே வரவில்லை. ‘’அப்படி என்ன நமக்கு தெரியாத வித்தையாக இருக்கும்’’ என்று யோசித்துக்கொண்டேயிருந்தது.

அடுத்த நாள் ஆற்றங்கரையில் நரியார் நந்துவும் குரங்கு கிட்டுவும் சந்தித்தனர். முல்லைக்காட்டில் இருக்கிற அத்தனை பேரும் அங்கே கூடியிருந்தனர். சிங்கராஜாவும் ஆர்வத்தோடு வந்திருந்தார்.

‘’இந்த நரியாருக்கு ஒரு மந்திரமும் தெரியாதே எப்படி ஜெயிக்கப்போறார்னே புரியலையே’’ என்று சிங்கராஜாவுக்கு மிகவும் பயமாக இருந்தது.

நரியார் கிட்டுவை கூப்பிட்டு ஆற்றுக்கு நடுவில் இருந்த ஒரு கொடியைக் காட்டினார்.
‘’குரங்காரே அதோ அங்கே ஆத்துக்கு நடுவுல ஒரு கொடி தெரியுதே! அதை ஆற்றின் மேல் நடந்து சென்று எடுத்துட்டு வராங்களோ அவங்கதான் வின்னர்! கைகளில் தண்ணீர் படக்கூடாது’’ என்றார் நரியார்.

கிட்டுவுக்கு ஆற்றில் நடக்க தெரியாது. இருந்தாலும் யாராலும் தண்ணீரில் நடக்க முடியாதே என்கிற தைரியத்தில் ஒப்புக்கொண்டார். எப்படியும் நரியார் தண்ணீரில் விழுந்துவிடுவார் என நினைத்தார்.

இருவரும் தயாராயினர். முதலில் நரியார் ஓடிப்போய் ஆற்றுக்குள் குதித்தார். எல்லோரும் ஆர்வமாக பார்த்துக்கொண்டிருந்தனர். நரியார் தண்ணீருக்குள் மூழ்கவில்லை. அப்படியே தண்ணீர் மேல் ஒற்றைக்காலில் நின்றார். எல்லோரும் சூப்பர் சூப்பர் என கைத்தட்டினர்.
அப்படியே பொறுமையாக ஆற்றில் நடந்த நரியார், ஆற்றின் மேலேயே நடனம் ஆடினார். குரங்கு கிட்டுவைப் பார்த்து சிரித்து கேலி செய்து சிரித்தார். ஆற்றுக்கு நடுவில் இருந்த கொடியை எடுத்துக்கொண்டு வந்து குரங்கிடம் காட்டினார்.

‘’குரங்காரே நான் ஆத்துல நடந்து போயிட்டு வந்தாச்சு. இப்போ நீங்க... நடந்துபோய் இன்னொரு கொடியை எடுத்துட்டு வாங்க’’ என்றார் நரியார். குரங்குக்கு தலையே சுற்றுவதைப்போல இருந்தது. அவர் எத்தனையோ மாயாஜால வித்தைகள் கற்றிருந்தாலும் இது மட்டும் தெரியவில்லை. இருந்தாலும் முயற்சி செய்யலாம் என நினைத்து ஆற்றுக்குள் குதித்தார். தொப்புக்கடீர் என தண்ணீருக்குள் விழுந்தார்.

‘’நான் தோத்துட்டேன்.. என்னை மன்னிச்சிடுங்க இந்தாங்க மாணிக்கக்கல்’’ என்று சிங்கராஜாவிடம் கொடுத்து மன்னிப்பு கேட்டுக்கொண்டார். ‘’குரங்காரே எவ்ளோதான் நமக்கு திறமையிருந்தாலும் ஆணவமாக இருக்க கூடாது, அது நம்மையே அழிச்சிடும்’’ என்று அறிவுரை கூறினார் சிங்கராஜா. மந்திரவாதி குரங்கு காட்டைவிட்டே ஓடியது.

****


சிங்கராஜாவுக்கும் முல்லைக்காட்டு விலங்குகளுக்கும் ஒன்று மட்டும் புரியவேயில்லை. நரியார் நந்துவுக்கு எந்த மந்திரமும் தெரியாது பிறகு எப்படி நீரில் நடந்துகாட்டினார்? எலிக்குட்டி போய் நரியாரிடம் கேட்டது ‘’நரியாரே எப்படி நீங்க தண்ணீல நடந்துபோனீங்க’’ என்றது. சிங்கராஜாவும் ‘’ஆமாம் நரியாரே நீங்க எப்படி தண்ணீரில் நடந்து போனீங்க’’ என்றார்.

‘’சிங்கராஜா அந்த குரங்குக்கு மந்திரமும் தெரியாது மாயமும் தெரியாது. அது ஒரு மோசடி பேர்வழி. விரலுக்கு நடுவில் சின்ன சின்ன சர்க்கரை கட்டிகளை வைத்துக்கொண்டு கையை அப்படியும் இப்படியும் ஆட்டி அந்த கட்டிகளை உடைத்து பொடியாக்கி ஏதோ வெறும் கையில் சக்கரையை வரவைத்த மாதிரி உங்கள் மேல் வீசியதை பார்த்தேன்.’’ என்று நரியார் சொல்ல..

‘’ஓஹோ..!’’ என்று ஆச்சர்யப்பட்டார் சிங்கராஜா

‘’அப்போதே தெரிந்துவிட்டது அவன் ஒரு போலி மந்திரவாதி என்று. அதனால் அவனை ஏமாற்றி ஜெயிக்க நினைத்தேன். அதனால் குரங்கினை ஆற்றில் நடக்கிற போட்டிக்கு அழைத்தேன்.’’ என்றார் நரியார்.

‘’அதுசரிங்க நரியாரே எப்படி தண்ணீரில் நடந்து சென்றீர்கள்’’ என்றார் சிங்கராஜா.

‘’அதுவா... நேற்று இரவு ஆற்றில் இருக்கிற நம் ஆமையாரையும் அவருடைய நண்பர்களையும் சந்தித்து ஆற்றின் குறிப்பிட்ட சில இடங்களில் வெளியே தெரியாதபடி தண்ணீருக்குள் மிதக்கும்படி சொல்லியிருந்தேன். அதனால் ஆற்றின் மேல் அவர்களுடைய முதுகில் காலைவைத்து ஜாலியாக நடந்து சென்றேன். இந்த குரங்கு நடக்கும்போது ஆமையார் நகர்ந்து போய்விட்டிருந்தார்! அவ்வளவுதான்!’’ என்று புன்னகை செய்தார்.

‘’பலே நரியாரே! அசத்திட்டீங்க’’ என்று சிங்கராஜா கைதட்டி வாழ்த்த.. இதை கேட்டுக்கொண்டிருந்த முல்லைக்காட்டின் மற்ற விலங்குகளும் கைதட்டி மகிழ்ந்தன.

Monday, January 16, 2012

மின்னு





மற்ற யானைகளை போல இல்லாமல் மின்னுவுக்கு இரண்டு தும்பிக்கைகள். அதனாலேயே அவன் யாரையுமே மதிக்கமாட்டான். எப்போதும் கர்வமாக இருப்பான். யாராவது அவனோடு பேசினாலும் அவர்களோடு பேசமாட்டான். யாராவது உதவி என்று வந்து கேட்டால் செய்யமாட்டான். எப்போதும் காட்டுக்குள் தன் நண்பர்களுடன் திமிராக சுற்றிக்கொண்டிருப்பதுதான் அவனுக்கு வேலை.

முல்லைக்காட்டுக்கு பக்கத்தில் சுற்றுலா வந்த மனிதர்கள் யாரோ தீமூட்டி சமைத்தனர். சுற்றுலா முடித்து கிளம்பும்போது அடுப்பை அணைக்காமல் சென்றுவிட்டனர். அந்தத்தீ பரவி காட்டுத்தீயாக மாறிவிட்டது.

அது கொஞ்சம் கொஞ்சமாக காடுமுழுக்க பரவிக்கொண்டிருந்தது. விலங்குகளுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. குட்டிகளோடு பாதுகாப்பான இடங்களை நோக்கி ஓடின. பறவைகள் கூடுகளுக்குள் இருக்கிற குஞ்சுகளை வைத்துக்கொண்டு எப்படி எங்கே செல்வதென்று தெரியாமல் தவித்தன.

விலங்குகள் அனைவரும் சேர்ந்து சிங்கராஜாவிடம் சென்று ‘’சிங்கராஜா எங்களை காப்பாத்துங்க! காட்டுத்தீ பரவிகிட்டே வருது. காடு முழுக்க எரிஞ்சு சாம்பலாவதற்கு முன்னால எங்களை காப்பாத்துங்க’’ என்று கண்ணீர் வடித்து அழுதன.

‘’யாரும் கவலைப்படவேண்டாம். நானும் காட்டுத்தீ பற்றி கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்தேன், எப்படி உடனடியாக காட்டுத்தீயை அணைப்பது என்பது குறித்துதான் பேசிக்கொண்டிருக்கிறேன்’’ என்று கூறிய சிங்கராஜா, கரடியாரையும் நரியார் நந்துவையும் அழைத்து அடுத்து என்ன செய்வது என ஆலோசனை கேட்டார். நரியார் நந்து ஒரு யோசனை சொன்னார்.

‘’யானைகளின் உதவியோடு ஆற்றிலிருக்கும் தண்ணீரை அதன் தும்பிக்கையின் மூலமாக உறிஞ்சி தீயில் தெளித்தால் தீ அணைந்துவிடும். அதோடு நம்முடைய குரங்குகளை பயன்படுத்தி மரங்களில் இருக்கும் சிறிய பறவைகளை அதன் கூடுகளோடு பத்திரமாக எடுத்துவந்து நம் குகைகளில் வைத்திருக்கட்டும். கரடியாரும் அவருடைய கூட்டத்தினரும் இணைந்து காட்டில் பொந்துகளில் வாழும் சின்னச்சின்ன விலங்குகளின் குட்டிகளை பத்திரமாக மீட்கட்டும்’’ என்று நரியார் நந்து ஒரு திட்டம்தீட்டிக்கொடுத்தார்.

நரியார் நந்துவே நேரடியாக சென்று ஒவ்வொரு யானைகளிடமும் யார் யார் காட்டின் எந்தெந்த பகுதிகளில் தண்ணீர் தெளித்து தீயை அணைக்க வேண்டும் என சொல்லிக்கொடுத்தார். மின்னுவுக்கு இரண்டு தும்பிக்கைகள் என்பதால் அதிக நீர் எடுத்துவந்து நிறைய தீயை அணைக்க முடியும் என நினைத்தார் நரியார்.

‘’மின்னு நீதான் ஆற்றங்கரையோரம் இருக்கும் மாமர காடுகளில் பரவியுள்ள தீயை அணைக்க வேண்டும் அது உன் பொறுப்பு. அங்குதான் நிறைய பறவைகளும் அணில்களும் வாழ்கின்றன’’ என்றார்.

‘’அதெல்லாம் முடியாது. நான் என்ன நீங்க வச்ச வேலைக்காரனா.. என்னால எந்த உதவியும் செய்யமுடியாது. அதுவும் இல்லாம எனக்கு ரெண்டு நாளா காய்ச்சல், சளிபிடிச்சிருக்கு.. உடம்பு சரியில்ல.. என்னை விட்ருங்க நான் ஆத்தங்கரைக்கு அந்தப்பக்கம் பாதுகாப்பா போய் நின்னுக்கலாம்னு இருக்கேன்’’ என்று நரியாரிடம் சொன்னது மின்னு. நரியாருக்கு கோபம் வந்துவிட்டது.

‘’காடு மொத்தமும் தீபிடித்து எரிந்துகொண்டிருக்கும்போது இப்படியெல்லாம் பேசலாமா? உனக்கு இரண்டு தும்பிக்கைகள் இருப்பது இதுமாதிரியான சந்தர்ப்பத்தில் எவ்வளவு உபயோகமாக இருக்கும்.

இரண்டு தும்பிக்கையால் நிறைய தண்ணீரை எடுத்துவந்து அதிக மரங்களை காப்பாற்ற முடியும் என்றுதானே கேட்கிறோம்.

யாருக்குமே உதவாத அந்த இரண்டு தும்பிக்கைகளை இதற்காவது பயன்படுத்தலாம் இல்லையா.. நல்ல பையனாச்சே நீ.. இப்படி சுயநலமாக இருக்கலாமா?’’ என்று கேட்டுக்கொண்டார் நரியார்.

‘’என்னை மன்னிச்சிடுங்க நரியாரே.. நான் கிளம்பறேன். இப்பவே கிளம்பினாதான் ஆற்றுக்கு அந்தப்பக்கம் போய்சேர முடியும்’’ என சொல்லிவிட்டு மின்னு கிளம்பியது.
 
‘’மின்னு நீ யாரையும் காப்பாற்றவில்லையென்றாலும் பரவாயில்லை. ஆற்றுக்கு அந்தப்பக்கம் போகாதே! அது மனிதர்கள் வசிக்கும் இடம். அங்கே செல்வதால் அவர்களுக்கும் தொல்லை நமக்கும் தொல்லை.’’ என்றார் நரியார்.

ஆனால் மின்னுவோ நரியாரிடம் பதில் ஏதும் பேசாமல் முகத்தை திருப்பி வைத்துக்கொண்டது.

இதற்கு மேல் மின்னுவோடு மல்லுக்கட்ட முடியாது என நினைத்த நரியார் அங்கிருந்து கிளம்பி மற்ற யானைகளிடம் எப்படி தீயை அணைப்பது என்கிற திட்டத்தினை கூறினார்.

குரங்குகள் கடுமையான நெருப்புக்கு நடுவே புகுந்து குட்டி பறவைகளை அதன் கூடுகளிலிருந்து காப்பாற்றின.

எலிகள்,முயல்கள்,கீரிகள் எல்லாம் தன்னுடைய குட்டிகளை அழைத்துக்கொண்டு குகைகளுக்குள் பதுங்கிக்கொண்டன.

இரண்டு பறவைகள் சேர்ந்துகொண்டு அது வாழ்கிற கூட்டினை அழியாமல் தூக்கிக்கொண்டு போய் குகைகளுக்குள் வைத்துக்கொண்டன.

கரடியாரும் அதன் கூட்டத்தினரும் தீயினால் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றி பாதுகாப்பான இடங்களில் சேர்த்தனர்.

யானைக்கூட்டம் மொத்தமாக சேர்ந்துகொண்டு ஆற்றங்கரையிலிருந்து தண்ணீரை உறிஞ்சி வந்து நெருப்பு சூழ்ந்த மரங்களின் மீது தண்ணீரை தெளித்து நெருப்பை அணைக்க போராடிக்கொண்டிருந்தன.

அந்த சமயத்தில் மின்னுவும் அதன் நண்பர்களும் சேர்ந்துகொண்டு யாருக்குமே உதவாமல் ஆற்றைக்கடந்து சென்றன. ஆற்றுக்கு மறுபுறம் இருந்த தென்னைக்காடு மனிதர்களுக்கு சொந்தமானது. அங்கு நிறைய தேங்காய்கள் கிடைக்கும் என்பதால் அங்கே போய் தென்னை மரங்களுக்கு கீழே பத்திரமாக நின்றுகொண்டன.

‘’கொஞ்சம் விட்டிருந்தா அந்த நரியார் நம்மளையும் நெருப்புக்கு நடுவுல மாட்டிவிட்டிருப்பார், நல்ல வேளை தப்பிச்சோம்’’ என்று தன் நண்பர்களுடன் சொல்லி சிரித்தது மின்னு.

அதே நேரத்தில் முல்லைக்காட்டில் யானைகள் சேர்ந்து போராடி நெருப்பை அணைத்தன. விலங்குகளும் பறவைகளும் காப்பாற்றப்பட்டன. காட்டின் சில இடங்களில் புகை மட்டும் வந்துகொண்டிருந்தது. அந்த இடங்களில் முயல்களும் அணில்களும் சேர்ந்து இலைகளில் தண்ணீர் எடுத்துக்கொண்டு போய் ஊற்றி அணைத்தனர்.

இது எதுவும் தெரியாமல் தென்னைக்காட்டில் இருந்த தென்னை மரங்களில் தேங்காய்களை பறித்து தின்றுகொண்டிருந்தனர் மின்னுவும் அதன் நண்பர்களும்.

‘’நல்ல சுவையான தேங்காய்கள்.. இன்னும் ரெண்டு பறிச்சி போடு நல்லா சாப்பிடுவோம்.. ஆஹா செம ருசி’’ என யானைகள் ஒவ்வொன்றும் சொல்லிக்கொண்டே தேங்காய்களை தின்றுகொண்டிருந்தன.

திடீரென துப்பாக்கி வெடிக்கும் சப்தம். மின்னுவும் நண்பர்களும் பயந்து போய்விட்டனர். திரும்பிப்பார்த்தால் நிறைய மனிதர்கள் கையில் துப்பாக்கியோடு நின்றுகொண்டிருந்தனர்.

மின்னுவும் நண்பர்களும் மாட்டிக்கொண்டோம் என மீண்டும் ஆற்றை நோக்கி வேகமாக ஓடினர். ஆற்றங்கரையை கடந்துவிட்டால் மனிதர்கள் யாரும் முல்லைக்காட்டிற்கு வரமுடியாது.

மின்னுவுக்கு இரண்டு தும்பிக்கை என்பதால் அவனுடைய எடை மற்ற யானைகளை காட்டிலும் மிக அதிகம். அதனால் அவனுடைய நண்பர்களைப்போல வேகமாக ஓடமுடியவில்லை. அவன் ஆற்றங்கரைக்கு வருவதற்குள் மற்ற நண்பர்கள் அவனை அம்போவென விட்டுவிட்டு ஆற்றுக்குள் இறங்கிவிட்டனர்.

மின்னுவால் வேகமாக ஓட முயற்சி செய்த போது ஆற்றகரை மணலில் கால் மாட்டிக்கொண்டது. அதை வெளியே எடுப்பதற்குள் மனிதர்கள் அவனை சுற்றிவளைத்துக்கொண்டனர். எல்லோர் கையிலும் துப்பாக்கி. மின்னுவுக்கு பயமாக இருந்தது. மனிதர்கள் அனைவரும் அவனை ஆச்சர்யமாக பார்த்தனர். மின்னுவுக்குத்தான் இரண்டு தும்பிக்கை ஆச்சே!

மின்னு தப்பியோட முயன்றது. ஆனால் அதனுடைய கால்கள் மணலுக்குள் சிக்கிக்கொண்டிருந்ததால் ஒன்றுமே செய்யமுடியவில்லை. மின்னு துப்பாக்கி மனிதர்களிடம் வசமாக மாட்டிக்கொண்டான்.

ஒரு தென்னைமரத்திற்கு அருகில் மின்னுவின் நான்கு கால்களும் சங்கிலியால் கட்டப்பட்டு பூட்டிவைக்கப்படது. மனிதர்கள் பலரும் கூட்டம் கூட்டமாக அவனை வந்து பார்த்துச்சென்றனர். அவனுக்கு நிறைய பசித்தது. ஆனால் என்ன சாப்பிடுவது. சுற்றி சுற்றிப்பார்த்தான்.

தென்னைமரங்களிலிருந்து தேங்காயை பறிக்க முயற்சி செய்தான்.
நங் என பெரியகம்பால் மின்னுவை அடித்தனர். அவனுக்கு அழுகையாக வந்தது. அவனுக்கு இரண்டு தும்பிக்கை என்பதால் யாரோ சர்க்கஸ் காரனுக்கு மின்னுவை விற்கப்போவதாக பேசிக்கொண்டனர்.

‘’நரியார் சொன்னபடி ஒழுங்காக காட்டிலேயே இருந்திருக்கலாம். இப்போது இப்படி வந்து மாட்டிக்கொண்டோமே..’’ என நினைத்து நினைத்து அழுதான்.

அதே சமயத்தில் முல்லைக்காட்டில் தீ முழுவதுமாக அணைந்துவிட்டதா என ஒவ்வொரு இடமாக போய் பார்த்துக்கொண்டிருந்தார் நரியார் நந்து. நரியாரை பார்க்க மின்னுவின் நண்பர்கள் வந்தனர்.

‘’நரியாரே எங்களை மன்னித்துவிடுங்கள், உங்கள் பேச்சைக்கேட்காமல் ஆற்றை கடந்து சென்றதால் நம் மின்னு மனிதர்களிடம் மாட்டிக்கொண்டான். அவனை சங்கிலியால் கட்டிவைத்திருக்கின்றனர். தயவுசெய்து நீங்கள்தான் அவனை காப்பாற்ற வேண்டும்’’ என தேம்பி தேம்பி அழுதன.

‘’சரி, அனைவரும் வாங்க நாம் சிங்கராஜாவிடம் பேசுவோம்’’ என்று நரியார் மின்னுவின் யானைநண்பர்களை அழைத்துக்கொண்டு சிங்கராஜாவின் குகைக்கு சென்றார். சிங்கராஜாவிடம் மின்னுவைப்பற்றி அனைத்தையும் கூறினார்.

‘’மின்னு தவறு செய்திருந்தாலும் அவன் சிறுவன். அவனை காப்பாற்ற வேண்டியது நம்முடைய கடமை, ஒருத்தர் நமக்கு உதவி செய்யல என்பதற்காக அவங்க ஆபத்துல இருக்கும்போது நாமும் உதவி செய்யாம இருக்க கூடாது. அப்புறம் அவங்களுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம். உடனே கிளம்புவோம்.. மின்னுவை காப்பாத்துவோம்’’ என்றார் சிங்கராஜா.

உடனடியாக நரியாரும் சிங்கராஜாவும் ஒரு திட்டம் தீட்டினர். ‘’மனிதர்கள் உறங்கிக்கொண்டிருக்கும் இரவு நேரத்தில் கரடியார் மற்றும் எலிகளோடு போய் மின்னுவை காப்பாற்றுவோம்’’ என முடிவானது.

இரவானது. நரியார்,கரடியார் மற்றும் குட்டி எலிகள் என ஒரு டீம் ஆற்றைக்கடந்து சென்றனர். நரியாரும் கரடியாரும் தென்னைமரங்களுக்கு நடுவே மறைந்துகொண்டனர். யாராவது வருகிறார்களா என அவர்கள் இருவரும் பார்த்துக்கொண்டனர்.

குட்டி எலிகள் சத்தமில்லாமல் மின்னு கட்டி வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு சென்றன.

அங்கே மின்னு தூங்கிக்கொண்டிருந்தது. மின்னுவுக்கு பக்கத்திலேயே ஒருவன் துப்பாக்கியோடு தூங்கிக்கொண்டிருந்தான். அவனுடைய கைகளில் மின்னுவை சங்கிலிபோட்டு கட்டிவைத்த பூட்டின் சாவி இருந்தது.

ஒரு எலி போய் துப்பாக்கிக்காரனின் கையை கடிக்க.. அவன் தூக்கத்திலேயே ச்சூ என கையை உதற கையிலிருந்த சாவி தரையில் விழுந்தது. கீழே விழுந்த சாவியை இரண்டு எலிகள் சேர்ந்து தூக்கிக்கொண்டு போய் தென்னைமரங்களுக்கு நடுவே மறைந்திருந்த நரியாரிடம் கொடுத்தன. அதை கரடியார் வாங்கிக்கொண்டு பூட்டை திறந்து சங்கிலிகளை அகற்றிவிட்டு.. ‘’டேய் மின்னு எழுந்திரிடா.. ‘’ என தட்டிஎழுப்ப.. மின்னு கண்விழித்துப்பார்த்தது.

எதிரில் கரடியார் உஷ்ஷ் சத்தம் போடதே.. துப்பாக்கிகாரன் எழுந்திச்சிக்க போறான் என்று சத்தமில்லாமல் பேசியது. மின்னுவும் அதை புரிந்துகொண்டு பொறுமையாக எழுந்தது.. நரியார்,கரடியார் மற்றும் மின்னு மூவரும் அங்கிருந்து கிளம்பினர். மின்னுவின் மேல் குட்டி எலிகள் ஏறிக்கொண்டன.

அனைவரும் தென்னைமரங்களுக்கிடையே பொறுமையாக சத்தமில்லாமல் நடந்துசெல்ல.. திடீரென துப்பாக்கிக்காரன் விழித்துக்கொண்டான். ஹே.... என அவன் சப்தமிட.. மின்னுவும் நரியாரும் கரடியாரும் வேக வேகமாக ஓடினர். நரியார் திரும்பிப்பார்க்க தூரத்தில் நிறைய தீப்பந்தங்களோடு கையில் கம்போடு நிறைய ஆட்கள் துரத்திவருவது தெரிந்தது. ‘’கரடியாரே சீக்கிரம்.. அவங்க பக்கத்துல வந்துட்டாங்க..’’ என்று கத்திக்கொண்டே ஓடினார் நரியார். ஹேஹே என பயங்கரமாக கத்திக்கொண்டு மனிதர்கள் துரத்திக்கொண்டு வந்தனர். மிக அருகில்தான் ஆறு இருந்தது.

பின்னால் ஓடிவந்துகொண்டிருந்த மனிதர்கள் மிக மிக அருகில் வந்துவிட்டிருந்தனர். கற்களை எடுத்து வீசினர். ஒருகல் நரியாரின் கையில் பட்டது. கையிலிருந்து ரத்தம் வந்துகொண்டேயிருந்தது. ஆனாலும் கரடியாரும் நரியாரும் ஆற்றுக்குள் தாவினர்.

ஆற்றங்கரையிலிருந்து நீந்தி. மறுகரைக்கு வந்துசேர்ந்தனர். ஆற்றிற்கு அந்தபக்கம் மனிதர்கள் ஹோஹோவென கூச்சல் போட்டபடியிருந்தனர்.

‘’இனிமேல் கவலையில்லை’’ நிம்மதியாகி அனைவரும் சிங்கராஜாவின் குகைக்கே திரும்பினர். இரவு மின்னுவும் நரியாரும் கரடியாரும் அங்கேயே உறங்கினர். எலிகள் தங்களுடைய வீட்டிற்கு கிளம்பின.

அடுத்தநாள். காட்டிலிருந்த அனைத்து விலங்குகளும் சிங்கராஜாவின் குகைக்கு வந்தன. அனைவரிடமும் மின்னு தன் தவறை உணர்ந்து மன்னிப்புக்கேட்டான். அதற்குபிறகு மின்னு யார் எந்த உதவி கேட்டாலும் தட்டாமல் செய்யத்தொடங்கினான்.

Wednesday, January 11, 2012

முட்டா... குட்டா...





முல்லை காட்டில் முட்டா,குட்டா என இரண்டு குரங்குகள் இருந்தன. மற்ற குரங்குகள் போல இல்லாமல் இந்த இரண்டும் சரியான சோம்பேறிகள்.

குரங்குகள் கூட்டமாக பழங்கள் தேடி காடு முழுக்க சுற்றித்திரியும். ஆனால் இவை இரண்டும் ஏதாவது மரத்தில் ஜாலியாக படுத்து நாள்முழுக்க உறங்கும்.

‘’அலைஞ்சு திரிஞ்சு மரம் ஏறி இறங்கினா கால் வலிக்கும்.. வெயில் வேற ஜாஸ்தியா இருக்கு, யார் போய் காடெல்லாம் சுத்தறது’’ என்று சாக்குபோக்கு சொல்லிக்கொண்டு எப்போதும் ஒரே மரத்தில் உறங்கிக்கொண்டிருந்தன.

ஆனால் இந்த இரண்டு குரங்குகளுக்கும் மூன்றுவேளையும் பசிக்குமே.. என்ன செய்வது. யார் வீட்டிலாவது திருட வேண்டியதுதான். அப்படித்தான் ஒருநாள் யானையாரின் வீட்டில் தன் கைவரிசையை காட்டின. யானையார் வீட்டில் தன் குட்டிகளுக்காக சமைத்து வைத்திருந்த சோளப்பொறி உருண்டையை திருடி தின்றன. வீட்டில் இருந்த பாத்திரங்களையும் போட்டு உடைத்துவிட்டு ஓடிவிட்டன.

மாலைநேரம் யானையாரின் குட்டிகள் வெளியே விளையாடிவிட்டு வீட்டிற்கு வந்து பார்த்தன. வீடே அலங்கோலமாக கிடந்தது. சாப்பாடும் இல்லை. யானையார் வந்துபார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே நேராக சிங்கராஜாவிடம் சென்று புகார் கொடுத்தார். ‘’இதை நான் பார்த்துக்கொள்கிறேன் நீங்கள் நிம்மதியாக போய்வாருங்கள்’’ என சிங்கராஜா கூறினார்.



நரியார் நந்து துப்பறிவதில் பலே கில்லாடி. முல்லைக்காட்டில் யார் தப்பு செய்தாலும் அதை துப்பறிந்து கண்டுபிடித்து சரியான தண்டனையை பெற்றுத்தருவார் நம்ம நரியார் நந்து. அதனால் யானையார் வீட்டில் திருடிய திருடனையும் கண்டுபிடிக்கும் பொறுப்பு நரியாரிடம் தரப்பட்டது.

நரியார் நந்து நேராக யானையாரின் வீட்டிற்கு சென்றார். வீட்டை சுற்றி சுற்றி பார்த்தார். யானையாரின் குட்டிகளை அழைத்து விசாரித்தார். தன்னுடைய பூதக்கண்ணாடியால் வீட்டிற்கு உள்ளே சென்று சோதனை செய்தார். சாப்பாடு இருந்த இடம், பாத்திரங்கள் கீழே விழுந்த இடம் என எல்லா இடங்களையும ஒன்று விடாமல் பார்த்தார். அங்கே குரங்கள் வந்து போனதற்கான கால்தடங்கள் இருப்பதை கண்டார். அது இரண்டு வெவ்வேறு குரங்குகளின் கால்தடங்கள்.

நேராக சிங்கராஜாவிடம் சென்று ‘’ வணக்கம் சிங்கராஜா.. யானையார் வீட்டில் பார்த்ததில் இரண்டு குரங்குகள்தான் இந்த வேலையை செய்திருப்பதாக தெரிகிறது. அந்த குரங்குகள் இரண்டு குட்டிகளாக இருக்க வேண்டும். காட்டிலிருக்கும் அனைத்து குரங்கு குட்டிகளையும் வரச்சொல்லுங்க! நான் விசாரிக்கணும்’’ என்றார்.

‘’குட்டிகள் என்றால் ஏகப்பட்டது இருக்குமே , எப்படி அந்த இரண்டு குட்டிகளை கண்டுபிடிக்கப்போறீங்க நரியாரே?’’ என்றுகேட்டார் சிங்கராஜா.

‘’அதற்கு ஒரு சூப்பர் ஐடியா வைத்திருக்கிறேன்.. மதியம் பாருங்க என்ன நடக்குதுன்னு’’ என்று சிரித்தார் நரியார் நந்து.

அனைத்து குரங்குகளும் வரவழைக்கப்பட்டன. வரிசையாக நிற்கவைக்கப்பட்டன.

‘’குரங்கு குட்டீஸ் அனைவருக்கும் வணக்கம். உங்களில் யாரோ இரண்டு பேர் யானையார் வீட்டில் திருடிவிட்டார்கள். அது யார் என கண்டுபிடிக்கவே உங்களை இங்கே வரவழைத்தேன்’’ என்றார் நரியார்.

முட்டாவுக்கும் குட்டாவுக்கும் பயமாகிவிட்டது. ‘’ஆஹா இவரு கில்லாடியாச்சே கண்டுபிடிச்சிட்டாரா.. மாட்டிகிட்டோம் போலருக்கே’’ என பயந்துபடி நின்றனர்.
ஒவ்வொருவராக அருகில் சென்று பார்த்தார் நம்ம நரியார் நந்து.

மீண்டும் வெளியே வந்து ‘’உங்களில் யார் திருடியவர் என கண்டுபிடித்துவிட்டேன்.. அந்த இரண்டு திருடர்களும் யானையார்வீட்டில் சோளப்பொறி உருண்டையை சாப்பிட்டுவிட்டு வாயை துடைக்காமல் இருக்கின்றனர். அவர்களது வாயில் ஒட்டியிருந்த சோளப்பொறிகளை பார்த்து நானே கண்டுபிடித்துவிட்டேன்’’ என்று சொன்னார்.

உடனே முட்டாவும் குட்டாவும் அவசரமாக வாயை துடைத்துக்கொண்டன. ஆனால் வாயில் எதுவுமே இல்லை. அப்போதுதான் இரண்டு குட்டிகளுக்கும் நரியாரின் தந்திரம் புரிந்தது. நரியார் நந்து வேண்டுமென்றே திருடனை கண்டுபிடிப்பதற்காகத்தான் அப்படி சொல்லியிருக்கிறார். அடச்சே அவசரப்பட்டு வாயை துடைத்து மாட்டிக்கொண்டோமே என நினைத்த முட்டாவும் குட்டாவும் தப்பியோட முயன்றன. அருகிலிருந்த மரத்திற்கு தாவ நினைத்தன.

‘’முட்டா குட்டா.. இரண்டுபேரையும் பிடியுங்கள்’’ என நரியார் நந்து உத்தரவிட கரடியார் பாய்ந்து சென்று தப்பி ஓட முயன்ற முட்டா,குட்டா இருவரையும் பிடித்தார். சிங்கராஜா ‘’முட்டா,குட்டா உங்கள் இருவரையும் குட்டிப்பையன்களாக இருப்பதால் இந்த முறை மன்னித்துவிடுகிறேன். இனிமேல் திருடக்கூடாது மீறி திருடினால் உங்களுக்கு கடுமையான தண்டனை கொடுப்பேன்’’ என்றார்.

‘’சிங்கராஜா எங்களை மன்னித்துவிடுங்கள் இனிமேல் திருடமாட்டோம்’’ என மனம் வருந்தி மன்னிப்புகேட்டனர் முட்டாவும் குட்டாவும்.

சமயோசிதமாக செயல்பட்டு திருடர்களை பிடித்துக்கொடுத்த நரியார் நந்துவை அனைவரும் பாராட்டினர்.