Monday, February 27, 2012

மந்திரவாதி கிட்டு


முல்லைக்காட்டுக்கு புதிதாக குரங்கு ஒன்று வந்தது. அந்த குரங்கின் பெயர் கிட்டு! அது நிறைய மந்திர வித்தைகளை செய்து காட்டியது.

வெறும் கையை காட்டி, அந்த கையை அப்படியும் இப்படியும் ஆட்டி ஆட்டி சர்க்கரையை வரவைத்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியது. அந்த சர்க்கரையை அனைவருக்கும் கொடுத்தது.

ஒரு பூவை எடுத்து அப்படியே கைகளில் வைத்து கசக்கி தூக்கி வானத்தில் வீசியது. பூ குருவியாக மாறி வானத்தில் பறந்தது. அதைப்பார்த்து முல்லைக்காட்டு முயல்களும்,எலிகளும்,யானைகளும்,மான்களும் ஆச்சர்யப்பட்டன. அனைவரும் கைத்தட்டி மகிழ்ந்தனர்.

வித்தைகள் காட்டிக்கொண்டிருந்த குரங்கு திடீரென கூட்டத்தை நோக்கி ‘’உங்கள் தலைவன் யார்?’’ என்று கேட்டது.

‘’எங்களுக்கெல்லாம் தலைவர் சிங்கராஜாதான்! ஏன் கேக்கறீங்க? ’’ என்றது எலிக்குட்டி.
பதிலே சொல்லாமல் சிரித்துக்கொண்டே சிங்கத்தின் குகைக்கு கிளம்பியது குரங்கு கிட்டு.
சிங்கராஜாவின் குகை வாசலில் நின்றுகொண்டு ‘’ஏய் கோழை சிங்கமே.. வெளியேவா.. தைரியமிருந்தா என்னோடு மோதிப்பார்’’ என்று கூப்பிட்டது.

குகைக்குள்ளேயிருந்து நரியாரும் சிங்கராஜாவும் வெளியே வந்தனர்.
‘’வணக்கம் குரங்காரே நீங்க யார் உங்களை இந்த காட்டில் பார்த்ததில்லையே! ஏன் கோபமாக கூச்சல் போட்டுகிட்டு இருக்கீங்க’’ என்றது.

‘’நான் இமயமலையிலிருந்து வருகிறேன், கடவுள் எனக்கு நிறைய மந்திர சக்தி கொடுத்திருக்கிறார். மரியாதையாக இந்த காட்டை என்னிடம் கொடுத்துவிட்டு ஓடிவிடு.. இல்லையென்றால் உன்னை ஒரே நிமிடத்தில் அழித்துவிடுவேன், தைரியமிருந்தால் என்னோடு சண்டை போட்டு ஜெயித்துகாட்டு!’’ என்று சிங்கராஜாவை சண்டைக்கு அழைத்தது.




தன்னுடைய வெறும் கையை அப்படி இப்படி ஆட்டி அதிலிருந்து சர்க்கரையை வரவழைத்து ‘’அஸ்கு லஸ்கா.. குஸ்கு புஸ்கா’’ என்று சொல்லி சிங்கத்தின் மீது வீசியது! சிங்கத்துக்கு ரொம்பே கோபம் வந்துவிட்டது.. ‘’மவனே உன்னை அடிச்சி நொறுக்கிடறேன்’’ என குரங்கை அடிக்கப் பாய்ந்தார். உடனே நரியார் சிங்கத்திடம் சென்றார்.

‘’சிங்கராஜா இவன் ஒரு டம்மிபீஸு.. இவனை நான் பார்த்துக்கொள்கிறேன். நீங்க ரெஸ்ட் எடுங்க’’ என்றார் நரியார் நந்து.

குரங்கிடம் போய் நரியார் பேசினார். ‘’குரங்காரே.. ரொம்ப பேசாதீங்க..நான் கூட மிகப்பெரிய மந்திரவாதிதான். என்னோடு உங்களால் போட்டிபோட முடியுமா? நான் செய்யும் மாயாஜாலத்தை உங்களால் செய்ய முடியுமா?’’ என்றார்.

‘’அப்படி என்ன என்னாலேயே செய்யமுடியாத மந்திர வித்தை?’’ என்று திமிராக கேட்டது கிட்டு.

‘’நாளைக்கு காலைல சூரியன் உதிக்கும்போது ஆற்றங்கரைக்கு வந்துடுங்க குரங்காரே.. நம்ம போட்டிய அங்க வச்சிக்கலாம்’’ என்றார் நரியார்.

உடனே குரங்கு ஆவேசமாக ‘’ஏய் நரியே! நாளைக்கு போட்டில நீ தோத்துட்டா சிங்கராஜா இந்த காட்டைவிட்டே போயிடணும். அதுக்கு பிறகு இந்த முல்லைக்காட்டுக்கு நான்தான் ராஜா! நான் வச்சதுதான் சட்டம். எல்லாரும் என் பேச்சைதான் கேக்கணும்.’’ என்றது குரங்கு.

‘’ஒருவேளை நீங்க தோத்துட்டா என்ன பண்றது குரங்காரே’’ என்றார் நரியார்.
உடனே குரங்கு ‘’சிங்கராஜா காலில் விழுந்து மன்னிப்புக்கேட்டுவிட்டு போய்விடுகிறேன்’’ என்றது

****




இரவெல்லாம் குரங்கு கிட்டுவுக்கு தூக்கமே வரவில்லை. ‘’அப்படி என்ன நமக்கு தெரியாத வித்தையாக இருக்கும்’’ என்று யோசித்துக்கொண்டேயிருந்தது.

அடுத்த நாள் ஆற்றங்கரையில் நரியார் நந்துவும் குரங்கு கிட்டுவும் சந்தித்தனர். முல்லைக்காட்டில் இருக்கிற அத்தனை பேரும் அங்கே கூடியிருந்தனர். சிங்கராஜாவும் ஆர்வத்தோடு வந்திருந்தார்.

‘’இந்த நரியாருக்கு ஒரு மந்திரமும் தெரியாதே எப்படி ஜெயிக்கப்போறார்னே புரியலையே’’ என்று சிங்கராஜாவுக்கு மிகவும் பயமாக இருந்தது.

நரியார் கிட்டுவை கூப்பிட்டு ஆற்றுக்கு நடுவில் இருந்த ஒரு கொடியைக் காட்டினார்.
‘’குரங்காரே அதோ அங்கே ஆத்துக்கு நடுவுல ஒரு கொடி தெரியுதே! அதை ஆற்றின் மேல் நடந்து சென்று எடுத்துட்டு வராங்களோ அவங்கதான் வின்னர்! கைகளில் தண்ணீர் படக்கூடாது’’ என்றார் நரியார்.

கிட்டுவுக்கு ஆற்றில் நடக்க தெரியாது. இருந்தாலும் யாராலும் தண்ணீரில் நடக்க முடியாதே என்கிற தைரியத்தில் ஒப்புக்கொண்டார். எப்படியும் நரியார் தண்ணீரில் விழுந்துவிடுவார் என நினைத்தார்.

இருவரும் தயாராயினர். முதலில் நரியார் ஓடிப்போய் ஆற்றுக்குள் குதித்தார். எல்லோரும் ஆர்வமாக பார்த்துக்கொண்டிருந்தனர். நரியார் தண்ணீருக்குள் மூழ்கவில்லை. அப்படியே தண்ணீர் மேல் ஒற்றைக்காலில் நின்றார். எல்லோரும் சூப்பர் சூப்பர் என கைத்தட்டினர்.
அப்படியே பொறுமையாக ஆற்றில் நடந்த நரியார், ஆற்றின் மேலேயே நடனம் ஆடினார். குரங்கு கிட்டுவைப் பார்த்து சிரித்து கேலி செய்து சிரித்தார். ஆற்றுக்கு நடுவில் இருந்த கொடியை எடுத்துக்கொண்டு வந்து குரங்கிடம் காட்டினார்.

‘’குரங்காரே நான் ஆத்துல நடந்து போயிட்டு வந்தாச்சு. இப்போ நீங்க... நடந்துபோய் இன்னொரு கொடியை எடுத்துட்டு வாங்க’’ என்றார் நரியார். குரங்குக்கு தலையே சுற்றுவதைப்போல இருந்தது. அவர் எத்தனையோ மாயாஜால வித்தைகள் கற்றிருந்தாலும் இது மட்டும் தெரியவில்லை. இருந்தாலும் முயற்சி செய்யலாம் என நினைத்து ஆற்றுக்குள் குதித்தார். தொப்புக்கடீர் என தண்ணீருக்குள் விழுந்தார்.

‘’நான் தோத்துட்டேன்.. என்னை மன்னிச்சிடுங்க இந்தாங்க மாணிக்கக்கல்’’ என்று சிங்கராஜாவிடம் கொடுத்து மன்னிப்பு கேட்டுக்கொண்டார். ‘’குரங்காரே எவ்ளோதான் நமக்கு திறமையிருந்தாலும் ஆணவமாக இருக்க கூடாது, அது நம்மையே அழிச்சிடும்’’ என்று அறிவுரை கூறினார் சிங்கராஜா. மந்திரவாதி குரங்கு காட்டைவிட்டே ஓடியது.

****


சிங்கராஜாவுக்கும் முல்லைக்காட்டு விலங்குகளுக்கும் ஒன்று மட்டும் புரியவேயில்லை. நரியார் நந்துவுக்கு எந்த மந்திரமும் தெரியாது பிறகு எப்படி நீரில் நடந்துகாட்டினார்? எலிக்குட்டி போய் நரியாரிடம் கேட்டது ‘’நரியாரே எப்படி நீங்க தண்ணீல நடந்துபோனீங்க’’ என்றது. சிங்கராஜாவும் ‘’ஆமாம் நரியாரே நீங்க எப்படி தண்ணீரில் நடந்து போனீங்க’’ என்றார்.

‘’சிங்கராஜா அந்த குரங்குக்கு மந்திரமும் தெரியாது மாயமும் தெரியாது. அது ஒரு மோசடி பேர்வழி. விரலுக்கு நடுவில் சின்ன சின்ன சர்க்கரை கட்டிகளை வைத்துக்கொண்டு கையை அப்படியும் இப்படியும் ஆட்டி அந்த கட்டிகளை உடைத்து பொடியாக்கி ஏதோ வெறும் கையில் சக்கரையை வரவைத்த மாதிரி உங்கள் மேல் வீசியதை பார்த்தேன்.’’ என்று நரியார் சொல்ல..

‘’ஓஹோ..!’’ என்று ஆச்சர்யப்பட்டார் சிங்கராஜா

‘’அப்போதே தெரிந்துவிட்டது அவன் ஒரு போலி மந்திரவாதி என்று. அதனால் அவனை ஏமாற்றி ஜெயிக்க நினைத்தேன். அதனால் குரங்கினை ஆற்றில் நடக்கிற போட்டிக்கு அழைத்தேன்.’’ என்றார் நரியார்.

‘’அதுசரிங்க நரியாரே எப்படி தண்ணீரில் நடந்து சென்றீர்கள்’’ என்றார் சிங்கராஜா.

‘’அதுவா... நேற்று இரவு ஆற்றில் இருக்கிற நம் ஆமையாரையும் அவருடைய நண்பர்களையும் சந்தித்து ஆற்றின் குறிப்பிட்ட சில இடங்களில் வெளியே தெரியாதபடி தண்ணீருக்குள் மிதக்கும்படி சொல்லியிருந்தேன். அதனால் ஆற்றின் மேல் அவர்களுடைய முதுகில் காலைவைத்து ஜாலியாக நடந்து சென்றேன். இந்த குரங்கு நடக்கும்போது ஆமையார் நகர்ந்து போய்விட்டிருந்தார்! அவ்வளவுதான்!’’ என்று புன்னகை செய்தார்.

‘’பலே நரியாரே! அசத்திட்டீங்க’’ என்று சிங்கராஜா கைதட்டி வாழ்த்த.. இதை கேட்டுக்கொண்டிருந்த முல்லைக்காட்டின் மற்ற விலங்குகளும் கைதட்டி மகிழ்ந்தன.